Thursday 23 December, 2010

மெளனத் தூக்கம்

பல்லவி :
சொல்லாமல் தூங்கியதென்ன..?
பேசாமல் போனது(ம்) என்ன..?
வாழாமல் வீழ்ந்தது(ம்) என்ன..?
மலரே நீ உதிர்ந்ததுமென்ன..?

மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!

காலத்தை சொல்லவா? - அந்த
காலனைச் சொல்லவா - வந்த
கலக்கத்தைச் சொல்லவா - நீ கொண்ட
தனிமையைச் சொல்லவா?

மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!

சரணம் 1:
தாய்தந்தை அங்கே கலங்கி நிற்க,
தோழமை இங்கே தவித்து நிற்க,
நீ மட்டும் பிரிந்தாயே, செல்ல மகளே!

உன் சிரிப்பாலே, நிறைந்த உள்ளம்,
உன்சொல்லினாலே மகிழ்ந்த இதயம்,
ஒன்றல்ல ஏராளம், சின்ன மகளே!

கவிதை வரிகளில்; மனதைத் திருடிய;
மங்கையடி நீயே, கண்ணம்மா...
சிவந்த கனல் கொண்ட; சிதையின் நாவினில்;
உறங்கச் சென்றதேனோ?

மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!

சரணம் 2:
துள்ளித்திரிந்த நாளில் தொடங்கி;
கல்வியின்மேல் உன் கனவை வளர்த்து;
அதிலும் வென்றாயே, செல்ல மகளே!

ஏதும் இல்லா நிலையை நினைத்து;
இழந்த உறவை மனதில் பதித்து;
தனிமை கொண்டாயே, சின்ன மகளே!

கறுப்பு நிறத்திலும்; இருட்டு யுகத்திலும்;
குழம்பித் தவித்தாயே, கண்ணம்மா...
ஒளியின் திசையினை; விலக்கி ஒதுக்கியே;
தனித்துச் சென்றதேனோ?

மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!

வரிகளின் மூலம்:
வேண்டப்பட்டவர்களால் ஒதுக்கப்பட்டு, தனிமையை மிகவும் விரும்பிய எனக்குத்தெரிந்த ஓர் இளம்பெண், விளக்கமுடியாத திடீர் நோயினால் இறந்த பொழுதில் உருவானது!

மெய்யான மெய்!

சற்றுமுன் நடந்தது போல் தொன்றிற்று - இல்லையது
சற்றும் மெய்யில்லை என்பது மிகமெய்!

கருகிய காற்றும்; உருகிய நீரும்;
எரிந்த சாம்பலும்; உலுக்கிய நடு நிசியும்,
அச்சமும் சற்றும் ஈயவில்லை - மாறாய்,
ஈந்தது குலைநடுங்கும் தோலுரித்த மெய்?!

தகிக்கும் நாவை உளியாய்க்கொண்டு,
கனல் சிற்பம் செதுக்கி,
மனதில் கலைத்தாகம் கொண்ட பாவத்தினால்
தினித்தூட்டப்பட்டதுவோ இம்மெய்யினுள்?

'இருதயம் இடம் மாறும்'; 'ஈருடல் ஓருயிர்';
எனக்கேட்டு, கண்டு, நகைத்த தருணங்கள் பல...
நன்றாய் நினைவுக்குள் இன்னும் ஆழமாய்!..

சற்றுமுன் நடந்தது போல் தொன்றிற்று - இல்லையது
சற்றும் மெய்யில்லை - ஏற்றுக்கொண்ட  ஒருமித்த உருவகம்!

உடையும், சூடும், வெளிஉணவும்,
உறவும், உயிரும், பணமாய்த் திரிந்து,
வார்த்தைகளாய் உருவாகி,

வார்த்தைகளை உருவாக்கி மீண்டும்,
கனல்கக்கத்தூண்டியதன் நிலையும் நன்றோ?

தரைமேல் நின்று, நிறைந்த உலகின்
நிழலில் தோன்றி, நல்மெய் உரித்துணர்ந்து
வாழ்வை வாழத்தோன்றி; அது
எட்டாக்கனியாய், கானல் நீராய்,
நீர்மேல் கோலமாய், தெளிந்த பொய்களாய்,
உருமாறுவதும்,மாறியதும்தான், நியாயமோ?

சற்றுமுன் நடந்தது போல் தொன்றிற்று - இல்லையது
சற்றும் மெய்யில்லை - இந்த ஐந்து சதவிகித நூற்றாண்டு!

வரிகளின் மூலம்:
சில ஆண்டுகளாய் காதலில் உருகி, வெறுக்கப்பட்டவளாய் வருந்துகிற ஓர் பரதநாட்டிய நங்கையின் ஏமாற்றங்கள்!

Wednesday 22 December, 2010

குளிர்கூழ்

செப்புக்களின் சப்தம், மெல்லிசையாய்;-
அந்த பிஞ்சுக்கரங்களின் வித்தையில்,
மழலைச் சொற்களின் கவிவரிகளில்...

குடைந்தெடுத்த மரத்துண்டுகள், ஓர்
பண்பாட்டு  அடையாளமாய்;
செப்புப் பாத்திரங்களாய் உருவாகி,
அந்தச் சிறு அற்புதத்தின் படைப்பாற்றலுக்கு,
இரையாக  முடியாமல்,
தம் உயிரற்ற உடல்களை அரற்றி உருட்டி திமிறி, முடிவில்
விட்டால்போதுமென ஒதுக்கப்பட்டு
இளைப்பாறி கொண்டு கிடக்க...

இடையில் வந்த தேனமுது முத்துக்கள்தாம்,
இந்த வார்த்தைக் கோர்வை கொண்ட தலைப்பு.

ஆம்,
அந்த மழலை வேண்டியது, குளிர்கூழ் தயாரிப்பது!

வரிகளின் மூலம்:
'செப்புச் சாமான்களுடன்' விளையாடிக்கொண்டே 'ஐஸ்க்ரீமை'ப் பற்றிக்கேட்ட என் இரண்டேமுக்கால் வயது மகனை எண்ணத்தில்கொண்டு!


Sunday 19 December, 2010

ஆன்றோர் கூற்று!

வார்த்தைகளால் ரணமாகப்பட்டதாம்,
அவர்தம் மனங்கள்...மெய்தான் அது!

வார்த்தைகள் வரும்போது,
மனது,
தானொரு நிலையில்லா
நிலைகொண்டது தானிருந்ததே?!

மறுபக்கநிலை கொண்டு,
ஆலோசிப்பரும் உளரோ?
உண்டேல்,
தவறிப்போய் மெய்யும் வருந்தும்,
அவ்வுற்ற நிலை எய்தும்
வாய்ப்பு வாரா!

தவறுணர்ந்து வருந்தும்
மனத்திற்கு மன்னிப்பு உண்டென்பது
ஆன்றோர் கூற்று! ஆனால்,
விதிவிலக்கு ஒரு சில மனங்களுக்கு மட்டும்...

இமைகளைக் குளிர்விக்கும், சில நீர்த்துளிகளோடு,
அப்படி ஒர் மனம்!...

வரிகளின் மூலம்:
கோபத்தில் சண்டையிட்டு ஒதுக்கிய உறவினர்களை நினைத்து குழப்பத்தோடு உருகும் ஒரு வாலிபனின் வார்த்தைகள்!


அந்தரத்தில் வாழ்க்கை?

இறக்கமில்லா இல்லத்துணை;
தட்சணைக்காசுக்காக தானமிட்ட வாழ்க்கை என்பது போல்,
சொற்கணைகள்;

பகுத்தறிவை,
உடன்பிறப்பின் மூலம் உறுதிபடுத்தும் ஈன்றோர்...
இயலாமையின் வெளிப்பாடாய்,
உதிர்க்கும் நவரத்தின நெருப்புருண்டைகள்;

இரண்டில் ஒன்றாய்,
நிரந்தர முயற்சியும், முடிவும்,
எடுக்கவொன்னா மாமிசமப் படைப்பாய் உருவாக்கப்பட்ட,
ஒற்றைப்பறைச் சொந்தக்கார உயிர்க்கூடு!

எதிரே,
உயர்ந்தெழுந்த மதிலைத் தாண்டவோ,
இடித்துடைக்கவோ வழியறியாப் பிண்டமாய்!

மேற்கண்ட வரிகளின் காரணம்:
பெற்றோரின் காழ்ப்பும், பின் வரதட்சணையும் இணைந்து நசுக்கும் ஓர் மங்கையின் குமுறல்.

Friday 17 December, 2010

நாகரீக மாணவர்கள்

வண்ண மலர்த்தோட்டம்;
பூத்துக்குலுங்கும் நந்தவனம்;
மனம் தெரியாத மொட்டுக்கள்;
வாழ்க்கை புரியாத.,
ஆனால் வாழத்துடிக்கும், கேலிக்கு மட்டுமான...
வானரப்பட்டாளங்கள்! -

மானுட உருவங்கள்;மனிதக்குஞ்சுகள்;
மந்திரமாயையில் வீழ்ந்து தடம்மாறிய
தற்காலிக தம்பட்டங்கள்!

அறியாமையால், வாழ்க்கையின் வரைபடத்தை,
காற்றில் பறக்க விட்டு, எட்டிப்பிடிக்கத் தெரியாமல்,
முயற்சியும் அறியாமல்,
எதிர்காலம் மட்டும் திடகாத்திரமாய் ஒளிமயமாய்!

மேற்கண்ட வரிகளின் காரணம்:
இளைய சமுதாயத்தின், மாணவர் உலகில், இன்றைய காலகட்டத்தில் அநேகர் இருக்கும் நிலையாய், உணர்ந்ததன் வெளிப்பாடு!