Wednesday 19 September, 2012

மலையும், மழையும்!


விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. முந்தைய இரவினை முழுவதும் ஆக்கிரமித்து, அதிரடியாய் கொட்டித்தீர்த்த கார்த்திகைமழை, பதித்துச் சென்ற தற்காலிக தண்ணீர் குட்டைகளை, தனது முதல் மாடி வீட்டு பால்கனியிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தாள் மத்ரிமா. கண்டறிய முடியாத நரம்புப் பிரச்னையினால் கடந்த இரண்டு வருடங்களாக கட்டிலையே தனது உலகமாக்கிக்கொண்ட அவள் தாய் சுந்தரி, அந்த அதிகாலைக் குளிர் காற்றின் தூண்டலினால் சற்று அதிகமாகவே முனகினாலும், மத்ரிமாவின் புறலயிப்பு ஏனோ விடைகொடுக்கவில்லை! "கையில் பீங்கான் கோப்பையில் ஆறிக்கொண்டிருந்த காப்பியின் நினைவுகூட வராமல், அப்படி என்ன மத்ரிமாவிற்கு ஆர்வம் வெளியில்"... அம்மாவாய் எழுந்துசென்று ஒரு செல்ல அடியோடு கேட்கத்தோன்றி, முடியாமல், சிறிது புன்னகையோடு மட்டும் மறுபடியும் உறங்கத்தொடங்கினாள் சுந்தரி. இன்று சனிக்கிழமை. இந்த விடுமுறையிலும் கூட அவள் நினைவுகளைக் கலைத்து கலவரப்படுத்த வேண்டாமென எண்ணியிருப்பாள் போலும்.

புரண்டு படுத்து மீண்டும் அசந்து விட்ட அவள் தாயை அந்த ஒரே மகள்தான் தாங்கித் தாங்கி கவனித்துக்கொண்டிருக்கிறாள். அலுவலக நேரம் மட்டும் அவளுக்கு உதவ, அவள் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தவள்தான் இனியம்மா. எத்தனை பேர், எத்தனை யோசனைகள், எத்தனை உத்தரவுகள், எத்தனை நேர்முகங்கள்... முடிவாய் மத்ரிமா முடிவு செய்தவள்தான் இனியம்மா. பேரைப் போலவேதான் பேச்சும், பழக்கமும், அணுகுமுறையும். சட்டென மரியாதை கொள்ளும் கம்பீரத்தோற்றத்துடன் ததும்பும் கனிவும், யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் இனியம்மாவை?! கல்லூரிக்குச்செல்லும் மகளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டு, ஒவ்வொரு வார நாள் காலையிலும், மத்ரிமா அலுவலகம் செல்லும் முன் 'டான்' என வந்துவிடும் பாங்கு, இனியம்மாவிற்கு இணை இனியம்மா மட்டும்தான்! சனி, ஞாயிறு விடுமுறை என்றாலும், மத்ரிமாவிற்கு அந்த இனியம்மாவுடன் ஒருமுறையேனும் பேசிவிடவேண்டும் என தோன்றும் அளவிற்கு குடும்பத்தின் பாச நரம்புகளின் பாலமாய் இருக்கும் ஒருவரை 'வேலையாள்' என கொச்சைப்படுத்த எப்போதும் மத்ரிமாவின் மனது இடம் கொடுத்ததில்லை. அதனால்தானோ என்னவோ, அவள் மட்டும், எப்போதுமே கொஞ்சம் அழுத்தமாக 'இனி - அம்மா' என்றுதான் அழைப்பாள்!

அரசு, குழந்தைத் தொழிலாளராய்க் கணக்கில் கொள்ளாததர்க்காக நிர்ணயித்திருக்கும் குறைந்த பட்ச வயதை சரியாக எட்டும் போது, தனது தந்தையை எதிர்பாராத விபத்தில் பறிகொடுத்ததும்,  மனம் தளராமல் தன் தாய் சுந்தரி எடுத்த முடிவுதான் மத்ரிமாவை இன்று இந்த அளவு தைரியமானவளாகவும், சுத்தமும், சூதும் நிறைந்த உலகை எதிர்கொள்ளத் தெளிவானவளாகவும், சொந்தக்காலில் நிற்கத்தூண்டுவதாகவும் அமைந்தது. பெரிதாக ஒன்றும் இல்லை என சிலபேர் 'உச்' கொட்டிக்கொள்ளலாம். ஆனாலும் அதுவரை கடை கன்னிக்குப் போய் பழக்கப்படாத சுந்தரி, தன் கணவரின் பணியை அந்த லஞ்சம் விளையாடும் அரசு அலுவலக மேலாண்மை அதிகாரிகளிடம் போராடிப் பெற்று, கடன் காரர்களிடம் மன்றாடி அவகாசம் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக மத்ரிமாவின் கல்வி நிறைத்து, வேலைக்கும் வழி செய்து ... அப்பப்பா, சுந்தரியின் பம்பரவாழ்க்கை எத்தனை பத்திகளிலும் அடக்க முடியாது! 

தந்தையோடு கழித்த பதினான்கு வருடங்களில், குழந்தையாய், சிறுமியாய், விடலைப்பெண்ணாய் மத்ரிமா கற்றதும், அறிந்ததும், அனுபவித்ததும், வாழ்ந்ததும், மகிழ்ந்ததும், மற்றோரு பெண்ணிற்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேம்தான். அந்த மகள், தன் தாயுடன் கழித்த பொழுதுகளைவிட, அந்த தந்தை தன் மகளுடன் கழித்த பொழுதுகள் நிச்சயம் அதிகம்தான். அந்த பிணைப்பு ஒன்றுதான், அன்று அவள் மௌனமாய் கதறிய நாட்களில் அவளை அழியவிடாமல் பார்த்துக்கொண்டதும், இன்று உறுதிகொண்ட ஒரு  வெற்றிப் பெண்ணாய் வலம்வரச்செய்வதும். 

அதெல்லாம் சரி, இது எப்போதும் பெய்யும் மழை, எப்போதும் தேங்கும் தண்ணீர்... இன்று மட்டும் அந்த குட்டைகளில் என்ன சிறப்பு? போதிய அளவு பணம். அறிவிற்கும், வாழ்க்கைக்கும் என நல்ல வேலை, நெருக்கமான இனியவர்கள். இருபத்தியாறு வயதில், இந்த நாட்டின் தற்போதைய சூழலில் வளர்ந்தவளுக்கும், அவளுக்கு துணையாய் இருக்கும் தாய்க்கும் ஆழ்ந்த யோசனையில், வேறு என்ன இருக்கமுடியும்? 

...
...

அவ்வப்போது விருப்பத்துக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், சிறுவயதில் தந்தை ஊக்கப்படுத்திச் சேர்த்துவிட்ட ஓவியப்பயிற்சியில் கற்றுக்கொண்டதை வைத்து, தான் செய்த பல அளவிலான ஓவியங்களையும் சிற்பங்களையும் ஒன்று சேர்த்து கண்காட்சியாக வைத்து மற்றவர்களுக்குத் தன் திறமையை வெளிப்படுத்தவும், அந்தக் கண்காட்சி மூலம் பொருள் ஈட்டவும் பல சமயங்களில் யோசித்து கைவிட்ட விஷயம்தான் அது. இப்போது இனியம்மா வாயிலாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. நனவாக ரொம்ப நாட்கள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. இனியம்மா மகள் கல்லூரியின் முதல்வர் வாயிலாக கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்திக்கொண்டு, நல்லதொரு கூடத்தில் பத்து நாள் கண்காட்சியாக நடந்தேறியது. ஓவிய நிபுணர்களின் புகழாரங்களும், பத்திரிகைக்காரர்களின் பாராட்டுக்களும், ஓர் இரவில் அவளை, புகழிலும், பணத்திலும் உயர்த்தின. 

கண்காட்சி, நேற்றோடு நல்லபடியாக நடந்து முடிந்து, அனைத்து படைப்புக்களும், நகரில் முக்கிய இடங்களுக்கும், தனியார் சொத்துக்களை அலங்கரிக்கவும் சென்றுவிட்டன. இன்று மத்ரிமா அந்த குட்டைகளைப் பார்த்தபோது, 
"என்னைக்காவது ஒரு நாள் நீ, பெரிய ஆளா வருவம்மா! அன்னைக்கும் நீ, உன் தலைக்கு மோகத்தையும் போகத்தையும், எப்பவுமே நிச்சயமா கொண்டு போக மாட்ட! நீ கலங்காத குட்டை, அலம்பாத குடம், கலையாத வைக்கப்போர்... நீ எம் பொண்ணும்மா..." 
தீர்க்கதரிசியாய் அவள் அப்பா சொன்னது, அவள் காதில் அசிரீரியாய் ஒலித்தது!  "அப்பா, நான் உங்க பொண்ணுப்பா" மனதிற்குள் சொல்லிக்கொண்டிருந்தாள் மத்ரிமா!

"டிங் டாங்..."    
ஒரு பெரும் வி.வி.ஐ.பி யின் தனி ஓவியத்தை எழுத,
அவர் பி.ஏ, ஒரு பெரும் தொகையைக் கொண்ட காசோலையோடு வாசலில்.

வெளிச்சம் அதிகமானது, சாலையில்
வாகனங்கள் நகரத்தொடங்கின, சாலையில்
குட்டைகள் கலங்கத்தொடங்கின!

சற்றே அதிக வேகத்தோடு, 
திறந்த வாசல் கதவைத் தாண்டி அடித்த காற்று, 
சுவரில் தொங்கிய அப்பாவின் படத்தைத் திருப்பிப்போட்டது!..

Monday 23 July, 2012

லட்சுமி செகல் மருத்துவர்

போர்கொண்டு அடித்தொழிக்க,
வீரமுண்டு நெஞ்சில்,
பார்கொண்ட இடிமுழங்க,
நீயுமுண்டு நாட்டில்!

மேற்கூற்றின் மெய்யாய்,
நம்பி நழுவிய கனங்கள்,
முதுமையூற்றின் மெய்யாய்,
வெம்பி விலகிய பொய்கள்!

காயங்கொண்டு வந்தோருக்கு,
ஆற்றுமுதிரம் தந்து,
மாற்றுவழி ஏதுமின்றி,
காயம்விட்டுக் கழண்டாயோ?

நூற்றாண்டு காண,
மூவாண்டுகளின் மிச்சம்,
வற்றாது போன,
நின்நினைவுகளின் எச்சம்!

Monday 16 July, 2012

மறுபொழுது

இயலொளி இறந்து மீண்டும் பிறக்கும்,
அமணி காலம் இமைகூடி இறக்கும்,
முப்பொழுதும் மெய்க்கு ஆகாரம் இறைக்கும்,
விந்தையொக்கும் சுழலில் மறுவட்டம் தொடங்கும்!

Monday 9 July, 2012

கசாப்புக்கடை தெய்வங்கள்

தோல்துகிலுறித்து சிரமின்றி
சிரசாசனம் செய்யும் ஆடவியலா ஆடே!
உன் துணை சற்று தொலைவில்
ஓர் அன்னியம்!

'ஆடுகள'மில்லா  பேடியொடுங்கி
சிலிர்ப்பதுவது ஒன்றே, வேறு!
இனிக்கொன்றபின்தான் அதன்
தோல்துகிலுரியும் அத்தியாயம் நடந்தேறும்!

முன்னரே அதற்கும் சிரசாசனப்பயணம்,
மிதிவண்டியிலும் பிறவாகனத்திலும்
நடந்துமுடிகிறது தினமும்!

இந்த மேல் நடை மடக்கியெழுதத்
தூண்டிய மெய்க்காட்சிகளிலுள்,
மறைந்து, தெளிந்து, தெரியும்,
வயிறுகளும் உழைப்புகளும்,
குருதியாய் சிதறித்தெளிக்க,
நாட்கள் உருளும், மீண்டும் மெய்!

Friday 15 June, 2012

பி பி சி ஒன்னு

"ஸ்டோரி ஆஃப் இண்டியா"

பட்டினத்தை விற்றான்,
பதவிசாய் வாழ - 'இந்திய மன்னன்'

வாழ்வதாய் நினைக்கும்போது,
விழுங்கித் தீர்த்தது கருநாகம்!-'கிழக்கிந்திய கம்பெனி'

வெள்ளைக்காரன் செய்த வஞ்சமாய் சொன்னது
வெள்ளைக்காரன்...
"ஹாட்ஸ் ஆஃப் மைக்கெல் வுட்ஸ்"

Friday 11 May, 2012

ஷோகேஸ் குழந்தைகளே வாருங்கள்!

விடிய விடிய விழித்துப் பழகிய கண்கள்,
தூக்கம் மறந்து பழக்கம் விரட்டிய மூளை,
ஒற்றை விரலில் நடக்க நினைத்த கனவுகள்,
விரலைக் கூட வெட்டிய கவனக் குறைவுகள்,
... ஷோகேஸ்...

பாங்காய்ப் பார்த்த காலம் கடந்து பின்பார்க்க,
வருடம் இரண்டு கடந்து வந்து முன் தேய,
ஒருவரிடமும் இல்லா மாற்றம் வர நினைக்க,
என்னமோப்போவென மீண்டும் விழையும் அரக்க பரக்க...
... ஷோகேஸ்...

வரிகளின் மூலம்: விழித்திருந்து பணிக்காக் பணி செய்யும் குழந்தைகளை நினைத்து...

Wednesday 9 May, 2012

நீர் மறைத்த நீதியா?!

நீரிறைத்து நிறைந்து மறைத்து,
நின்ற நின் பார்வை,
எனதருமை நல்நீதி அம்மனே...

உன் பெருங்காதணிகளுக்கிடையில் குறுகிய,
அப்பார்வை மறைத்த கண்ணீரின் அவசியம்,

நின் கூற்றாய் வந்த அகவுள்ளில்லா
சரிநிலையன்றி வேறொன்றுமில்லை எனவே,
என் உள்நிலை குறுவகத்தில்,
தான் தோன்றி வேண்டி... கேட்டு வேகிறேன்! வளர்மனமே!

வரிகள் மூலம்: பாங்காய் படமெடுக்கும்  எம் நல்நீதி அம்மனின் ஓர்நிலை உருவகம்.

Monday 7 May, 2012

புன்னகைகள்...

பீறிட்டெழுவதா என் புன்னகை?
கொட்டினேன் அடக்குமுறையை!
ம்! ஆம்..., சிறிதாயுமிழ்ந்து நம்
நட்புக்கவர்ச்சியைத் தொடங்கினேன்!

காத்திருந்துதான் பார்ப்போமே,
உருண்டுவந்த வாகனத்தில்,
மென்மையாய் நின்ற உன் உருவம்,
அறைந்ததே என் பட்டினிக்காதலை!

நளின நங்கையே உன்,
ஓரக்கண்ணும் கடைக்கண்ணுமாய்;
என் முன், மின்னல் வெட்டிப்பின்,
பின் சென்ற தருணங்கள் பல!

தாத்தாவிற்குப் பேத்தியென நினைத்த உன்னை,
தந்தைக்குப் பெண்ணென உரைத்ததைக்கேட்டு,
சற்றே அதிர்ந்து சுதாரித்துக்கடந்த;
கடத்திய நொடிகள் மறக்க...

நாள்தோறும் நவில்வதற்கு;
நயமாய் பழகிப் பத்திரமாய்,
பதப்படுத்திப் பரவலாய்,
பொழிகிறேனே...,
இனி என் புன்னகைகளை!

Sunday 8 April, 2012

என் பள்ளி : சிட்டி ஸ்கூல் (பாகம் 1)

விழிமூடி முன்யோசிக்க;
திரைமுன் நிழலாடும் நிசப்தம்,
உடன் அழைத்துச்செல்லும்,
மெல்லுதிர நினைவுகள்...

அழுது அழுது சென்ற முதல் பள்ளி,
குறுக்குத்துரை சிட்டி ஸ்கூல்!
கூடை தூக்கிக்கூடவே வரும்,
லச்சுமி ஆயாக்கா சொல்லும்

எரிச்சல் வந்த அழகு, 'பச்சத்தண்ணிமா..ல...'!
வகுப்பு இடைவெளியில்,
பக்கத்திலே ஓடும் ரயிலின்,
முகம் தெரியா உயிர்களுக்கு, "டாட்டா"!

வரப்பில் பரித்துண்ட வெண்டை,
திடீர் குதூகலங்கொடுத்த,
பள்ளியின் வாசல் சறுக்கு,

வியர்வைத்துளி கொடுத்திழுத்த,
ரிக்சா மாமா எசக்கி;
பார்த்து ஓட்டி 'ஹோய்' போட்ட,
வெண்தாடி சுடலை தாத்தா;
(தொடரும்)

என் பள்ளி : சிட்டி ஸ்கூல் (பாகம் 2)

இன்றும் நினைவு கொள்ளா…

அதிகாரமாய் தோன்றிய,
'ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்' வேலா மிஸ்;
'மெஷினை' மாசின் என மாற்றிக்கொடுத்த
'செகண்ட் ஸ்டாண்டர்ட்' வெயிலம்மாள் மிஸ்

ஈரமான மனத்தோடு பார்த்த,
'தர்ட் ஸ்டாண்டர்ட்' பார்வதி மிஸ்;
சிறப்பாய் மனங்கவர்ந்த
'ஃபோர்த் ஸ்டாண்டர்ட்' ப்ரேமா மிஸ்;
அதிரடியான மென்மையாய் அதட்டும்,
'ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட்' லோகநாயகி மிஸ்;

நாற்றாய் ஊன்றிய,
ஆயக்கா நாச்சியார் முதல்,
ஹெட் மிஸ்ட்ரஸ் ரொஜாரியோ வரை;

தினம் மாலை நான்கு மணிக்கு, வீட்டுத்
திண்ணையிலேயே கழித்து
ஓரங்கட்டிய வீட்டுப்பாடங்கள்;

முடிக்காமல் போன வேலைகளை,
நகாசு வேலைகாட்டி நடித்து,
பலசமயமும் தப்பித்தும்
சில சமயம் கொக்கிப்பிடியில் சிக்கியும்
கழிந்த நாட்கள்;

ப்யூன் மணியண்ணனுடன்
வீடு வரை வந்தெடுத்த, பாடம் முடிக்காத,
ஏரோப்ளேன் அட்டைப்படம் போட்ட ,
ஸோஷியல் சயின்ஸ் நோட்டின் அழியாத நினைவுகள்…

தினம் தோறும் வழிந்து வாங்கிய,
அம்மாவின் கையெழுத்து…
ப்ளூ கலர் அட்டை 'ஹோம்வொர்க் டைரி'!;
பரீட்சை தோறும் வந்த,
பிஸ்தா பச்சை ப்ராக்ரஸ் கார்ட்!
(தொடரும்)

என் பள்ளி : சிட்டி ஸ்கூல் (பாகம் 3)

பிரமநாயகமும், லலிதாவும்,
செல்வீஸ்வர மூர்த்தியும், அழகுபெருமாளும்,
கிரிசங்கரும், அழகு மீனாட்சியும்,
சாந்தியும், ரேவதியுமாய்
கழிந்த வார நாட்கள்…

ஹரியும், பாக்கியும்,
லலிதாவும், சுதனும்,
அழகு மீனாட்சியும், பொன்னையாவும்,
அண்ணனும், அவன் கிரிக்கெட்டும், சுப்பாச்சியுமாய்
கழிந்த மாலைகளும், வார இறுதிகளும்…

நெருஞ்சி முட்களும்,
ரோஜா இதழ்களும் என,
நிறைவாய்க் கொடுத்ததே அந்த பால் பருவம்.

“ரோஹினியுடன் பரத நாட்டியம் முடியுமா?,
உனக்குத்தான் ஆட வருமே, முடியுமே!”
அஞ்சாப்பு டீச்சர் ஊக்கப்படுத்தியதும்,
“முடியவில்லையே மிஸ்”, என மறுத்ததும்…
தெளிவான நிழலாய் ஆடுவதும் அதிசயம்,

இறுதியாண்டின் பள்ளி ஆண்டுவிழா…
முத்தாய்ப்பாய் நடந்த சுனிலின்
துள்ளல் டிஸ்கோ!

அண்ணனினால்,
அப்பாவால் தேர்ந்தெடுக்க அவசியப்பட்டு,
ஏழு வருடங்கள் கழித்த சிட்டி ஸ்கூல்…
இமை மூடி மனத்திரையில் உதறி யோசிக்க,
அருவியாய்க் கொட்டும் இனிய
சிறு உலகமாய் அமைந்த அந்த,
மொட்டு மலர்ந்த நாட்களும்
அதன் நினைவுகளும்! ஆம்,
இனி நினைவுகளில் மட்டுமே...
நிரந்தர குதூகலம் அந்த மழலைக் காலங்கள்!
(நிறைவு)

Saturday 7 April, 2012

நட்பை... ஆம், நட்பைக் கேட்கிறேன்!

நண்பா...
தாமதமாகிவிட்ட வாழ்த்துக்களுக்கு,
மன்னிப்பு கேட்டால், நம் நட்புக்குக் களங்கம்!
கேட்காமல் விட்டால் நம் மரியாதைக்கும்..., 
ம்... அதுவேதானே!

ம்.. என்று தொடரவும்;
ம்ஹூம்... என்று மறுக்கவும்,
மனக்கூடு இடந்தர மறுப்பதும்,
நியாயம்தானே!

நித்தம் நல் நித்திரை,
விழித்திரை தழுவும் வரம்பெற்ற நாம்...
விழி திறந்த காலத்தில்,
நன்றி நவிலக்கூட இதழ் விரிக்க விழையாது,
மௌனங்கொள்வதும் ஏனோ?
தமிழும் பயணமும் பாணியும்,
நின் புனைதலில் தோன்றிய எழுத்துக்களாய்
கண்களுக்கு விருந்து படைக்க...
நாம் காலங்கடத்தி காத்திருப்பது,
குளிரிருட்டுப்பகலவனா? பகல்வெம்மைச்சந்திரனா?

காலந்தாண்டி பொறுத்துரைக்கும் வாழ்த்துக்கள்.
இருப்பினும் அவை வாழ்த்துக்கள்!

வரிகள் மூலம்: தவற விட்ட வாழ்த்துக்களைத் தாமதமாய்ச் சொல்ல விழைந்த நட்புக்காக!

Wednesday 14 March, 2012

'நாகர'த்தில் பொறிக்கணும், ஹை... நானும் அப்பா!

நாடி உயர்த்தி விரைப்பாய்,
...நான் கழித்த காலங்கள், உனை
நாடி வந்து உரையாடி, 

...நாம் கழித்த மணித்துளிகள், நம்
நாடி ஜோதிடர் கூற்றுபற்றி குறித்த,

...நாளில் கழித்த முகூர்த்த நொடிகள், உன்
நாடி பார்த்து மருத்துவர் சொன்னதைக் கேட்டு, 

...நாசூக்காய் குதித்துக்கழித்த சந்தோஷ பொழுதுகள், மீண்டும்
நாடி துருத்தி
ப் பார்த்த நம் மழலை விரல் பற்றியதும், உருகி
...நாபிக்கமலத்தினின்று கழிக்கும் குதூகலத் தருணங்கள், தருணங்கள்!

கரண்ட்டு கம்பி

தெனைக்கும் கொஞ்சம் தூக்கிக் கொடுத்த
நெல்லுக்கு முக்கி முக்கி
களையெடுத்த கட்ட பிடிச்ச காட்டுல, இன்னுமும்
பாதங்கடுக்கற கெட்டி மண்ணு கேக்குதுவோ?

"தைவரைக்கும் முக்காவாசி நெல்லத்தான்,
முழுசா தூக்கி கொடுத்தவ! பங்குனில சுடு வெயில்ல இப்போ,

அள்ளிக்காம கிள்ளிக் கொடுத்து வயித்தக்
கழுவ வழி கொடுப்பா நம்ம கடலயின்னு
நொந்து நோகாம வெதச்சு வச்சா,
பீஸப்புடுங்கி சேத்து வைக்கேம்முன்னு,
கெளம்பி வந்த கூவைங்கள,

கண்ணுக்கே காட்டாதவ, பகப்பொழுதும் வார்ற இருட்டுக்குள்ள,
கருகிப்போன காட்டப்பாக்க, மனசு வெந்து ஒடம்பும் வெந்து,
பொம்பளங்க புள்ளங்கள, பசிக்கழுதத பாத்து பாத்து,
கண்ணீருல சீவன் வத்தி, கசங்குறியா பழி மனசே?"

என்னமோ போவேன்னுட்டு வீம்பா நின்னாலும்,
நம்ம மண்ணு கேட்டதுக்கு,
பதிலத்தான் தேடிக்கிட்டு கெடக்கேன்!...
ஏளா, அது எங்கையாச்சும் கெடைக்குமா?

Tuesday 13 March, 2012

மொகங்காட்டும் கண்ணாடி

இரு வெடல மனசுங்க,
தெவங்கித்தெவங்கி ஓடுதுங்க!
வாக்கப்பட ஆசப்பட,
வயசின்னுமும் வரலயன்னு;
சொல்லாம சொல்லிப்புடும்,  ஆமாம்!,
இந்த சீரான காலமொகம்!