Thursday 1 December, 2011

மீண்டும் உருளும் தடாக க்ளக்குகள்!

சோகக் குடைச்சலாடும் மனம்;
குவிந்து கனிந்து சிவந்த விழிகள்;
தேர்வு, தந்தை, தாய், தனிமை...இயல்பில் துவள்ந்து,
முக்கனியாம் வாழை, பலா, மா...
தவிடாய் மாறி, மாறி சுவைகுறைந்து குத்தும்,

சோகக் குடைச்சலாடும் மனம்;
நகரா கீழ்விழி தடித்துக் காட்டும்;
மாய உருவம் உருகுவது நியாயமோ... மெய்யில் தர்மமோ?!
மனங்குதித்து, தளிர்விடும் நிலையில்,
நினைந்துரைத்து ஆட்கொள்ளும் எம் நல்நீதிஅம்மனே,
நின் மனம்நினைக்கும் கள்ளமற்ற மனம் வாழ்க! அந்தி வரும்,

சோகக் குடைச்சலாடும் மனம்;
இனி இதைப்போன்றனவைகளனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு,
நின் ஏரி உயர்ந்து இறங்க, இறங்கா மனமும் தோழமைகளும்,
எளியதாய் மாற்ற, இந்நிலையைத் துடித்தெறிந்து பறக்கவிட்டுவிட்டு,
கரை கடந்துருண்டு குதித்து வந்து அருள் செய்வாய்!



வரிகள் மூலம்: எதிர்பாரா குடும்பச் சிக்கலில் அழலும் ஓர் அந்தி விடலைப்பருவப் பெண்ணின், ஓர் சூழல்!

Wednesday 26 October, 2011

பொறிகள்

தலைக்கனமாய் குச்சிகளும்,
பொறி பறக்கும் கம்பிகளும்
உலகிற்கே உருவாக்க சிதைக்கப்படும் வாழ்வுகள்,
கந்தகம் எட்டிப்பார்க்கும் சுவாசக்குழாய்கள்,
விஷச் சாயமேரிய விரல்கள்!

பசி வயிறை காரணமாய்க் காட்டி,
வயிறெரிந்து வாழ்த்து பகிரவா?...
சிறுவனே!
நின் சாபம் பொல்லாதது!
இருந்தும், அது சிறுவனுடையதாயிற்றே!

மனங்குறுகி மற்றோரின் சிரிப்பில்
மகிழ்ச்சிகொண்டதாய்க் காட்டிக்கொள்ள,
கபடமில்லா தெய்வத்தின் அச்சாய்,
நின் சொற்களைக் கொள்ள,
மனமே நடிக்கத் தொடர்வாய்!

Saturday 24 September, 2011

கனத்த கடந்தவைகள்!

அகண்ட இருளில் உருண்ட
குத்துப்போனியின் 'நங்' எதிரொலிக்கிறது;
வழக்கமாய் பழக்கப்பட்டவைகள்,
நிறம்மாறி தெரிகிறது;

வீம்பாய் உதிர்த்த சிரிப்புக்கள்,
மேகமாய் கலைகிறது;
சொந்த சொத்துத் துளிகள்,
கன்னத்தை பதம் பார்க்கிறது;

பஞ்சுமணலில் அடித்த குட்டிக்கரணங்களாய்,
மாரில் பட்ட மிதிப்புகள் நினைவலையில் துடிக்கிறது;
எழுந்து அனைத்தையும் தட்டிவிட்டு,
புதைந்திருந்த வலக்காலை பாரத்தோடு எடுத்து வைத்து...

உருவடிவ நிகழெதிர்காலம்!

தெளிவான குரல்; துள்ளிய மனம்,
கடினத்தோடு கழித்த,
சில மருத்துவமனை இரவுகள் தந்த தெம்பு!

உடல் பாரம், நாற்பதை எட்டாத பொழுதும்,
உப்பிய அழுத கன்னங்கள்;
உருண்டை முகம் பிரதிபலிக்கும்,
உருவத்தோடாடிப் போயிருந்த உயிர்!

சிவந்த இளஇதழ்களைக்
காணும், நினைக்கும் பொழுதெல்லாம்,
உவகை கொண்டு தித்திக்கும் மனம்!

சிறுமூக்கு தாங்கிய கண்ணாடிக்குள்,
ஊடுறுவும் இன்னும் சிறுபளீர் விழிகள்;
கூர்ந்து தெறிக்கும் பார்வையழகை,
மெச்சி உச்சிமுகர்ந்து அரவணைக்கும்
பொழுதுகள் தரும் பாச சுகங்கள்!

எதிர்காலத்தில்,
வந்த அந்தத் தெத்துப்பல்லழகைக் காண;
காலம் கைகொடுக்கக்
குருதிக்குள்ளாடி இருதயம் துடித்து
எதிர்பார்ப்பது, நிச்சயம் இயற்கையறியும்!

Friday 16 September, 2011

தாங்குபூமி

மனதுக்கும் உடலுக்கும்,
வயதுக்குச் சண்டை;
நிழலுக்கும் நிஜத்துக்கும்,
வாழ்விற்குச் சண்டை;
பூபாளமே, தென்றலே,
முல்லையே வாரும்!
எங்களைப் பாரும்!

நாடிவந்தும் வாடிப்போகும் குட்டைக்குள்
முங்கு நீச்சலடிக்க முயலும்,
முழங்கால் நாழிமுதல்,

நற்றிணை, நாலடி நவிழ்ந்த பருவம்பல,
முற்றிய மனதோடு முன்னேறி கடந்த
முடி கழித்த சருகுகள் வரை,

உணர்விழந்த தருணங்கள் பலவும்
கழித்ததென்னவோ நிஜமே!
தருணங்களும், சூழலன்றி
காரணிகள் ஒன்றென்பதே, வியப்பு!

இயற்கை மன நிலை! விதைத்த
செயற்கைப் பொழுது கழி நிலை!
கடைவரை இருளிலும் நிழலாய் வேண்டுமென,
வாழ்வியலுக்கு ஆதாரமாக்கக்கொண்டு
நீருக்குள் சுவாசித்திருக்க,
இடைவந்த இம்சிக்கும் இடைச்சொருகுகள்,
நாட்கள் நகர, விருப்பத்தொடு இணைத்த
நிரந்தரக் கொடூரமாகிவிட்டனவே!

பேடிகளாய்க் குனிந்த முதுகுகளைப் பார்த்தே,
பரவசமான அமைதியோடு பூமி மட்டும்!

Thursday 25 August, 2011

வணக்கம் தேவசுரா!

பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்தேன்
உடல் வேர்த்துக் கரைந்து அலைந்தேன்;

நிழல் கழன்று மரணித்த பின்பும்
நிலை கொள்ள எத்தணித்தேன்;

பசி தூக்கம் விலகிச்சென்றும்,
உயிர் பிடித்து உயரப்பறந்தேன்.

பலகாலம் உருண்ட பின்பு,
கடந்ததெல்லாம் காரணமாத்தா னென
ஐயங்கொண்டு தூசுதட்டி திருப்பிப் பார்த்தேன்;

தட்டிய தூசா, விலக்கிய பார்வையா?
கண்ணெதிரே வெறும் புகைமண்டலம்
உற்று உணர்ந்தால்; ஆம், அது விண்ணுலகம்.
நரகமா? சொர்க்கமா? மீண்டும் ஐயம்...

Saturday 13 August, 2011

நிகழ்வை விட்டு.

அழகாய் மணமாய்  என் தோட்டத்தின்,
வசந்தமென பல முள்ரோஜா மலர்கள்;
கொலைக்கும் மேலாய் கொடுஞ்செய்கை யதுவென
முத்துக்கள் சிதறி உறுதி கூறினவையே!

பதினாறின் அதிகமாய் செல்வங்கள் இருந்தும்
பட்டெனவே செய்யத் தூண்டியதும் என்னவென
வருந்தும் மகிழ்ந்தும் வரும் ஒவ்வொரு,
மறுதினமும் நேற்றேனவே மாறியதும் மெய்யே!

வரிகளின் மூலம்: நியாயத்தை விரும்பும் மனமொன்று லஞ்சம் வாங்கியதை நினைத்து வருந்திய தருணம்

Friday 12 August, 2011

இன்னபிற...

கனத்தது முதிர்சடலம்;
வலித்தது பிள்ளைமனம்!
கனத்தது பால்தேகம்;
பூரித்தது பெற்றமனம்!
மறைதலும் தோன்றலும்,
இறப்பும் பிறப்புமாய்
ஆனதுவே!இதில்
மாக்களாய் மாறி,
மக்களின் துண்டங்கள்
தோன்றுவதும் நியாயமோ?
தூண்டப்படுவதுவும் ஞானமோ?

Tuesday 9 August, 2011

நல்நீதி அம்மனே!

குயில்குரலாள்;
சிரத்திலூன்றிய கருங்கார் கூந்தலாள்;

அடியாறில் உச்சி தொட்ட மாயை உருவத்தாள்;
வதனத்திலகம் உணர்வுமிழும் மென்னுக்கிரத் தோற்றத்தாள்;
விழியுருளம்கண் நாடியமர்ந்த
உருச்செதுக்கி கொண்டவளாம் மங்கையவள்,
அறிவுருகித்தங்கன் னங்கள்தமை
உவர்நீரில் நனையச் செய்தவளவள்;

தருணங்களின் தனிமையை தன்வயப்படுத்திய
சங்கதிகள் சிலவும் உதிர்க்க,
தொன்மை தொக்கி நிற்க; அகம்,
மையமதில் அழுத்திப் பார்க்க;
முன்வாய் பல்பதினாறும் முத்திரை நகையுதிர்க்க,
இனிமையாய் பெற்ற விடை மிக நன்று, நன்றே!

Monday 8 August, 2011

அகற்றல் விருப்பம் வசம்.

மூன் றேழு உருமாறி,
முதிர்ச்சியென வேடம் தரித்து,
நாவால்நன் சொல்பல நவிழ்ந்து,
பின்தங்கி, ஒவ்வாத தோழமை
நினைந் தழன்று, நீரால்
கண்ணிறைத்து, அதன் விலகிப்
பருவமே போற்றி, மெய்யுணர்ந்து
நிலை தெளிந்து நகைத்த
நல் நங்கையே, நீ வாழியவே!

Thursday 4 August, 2011

எளம மனசு...

அவனக்கேளு, இவளக்கேளுன்னு,
அம்பது வருஷமும் ஓடிப்போச்சு,
எழுவது வயசுல கண்ணு ரெண்டும்
அரக்கா பார்வேல அவிஞ்சு போச்சு

குடுத்தா முடுஞ்சுறும்னு, கைநெறைய வேலையெல்லாம்
நம்பிக் கொடுத்தவுக, மனசு கோண செய்யறது,
பொறப்பெடுத்து வளந்து வந்த வம்சத்துக்கும் ஆகாதுன்ட்டு,

ஓடி ஆட முடியாம, ஒடம்பு பூரா தேஞ்சாலும்,
ஒத்த ஆளா நின்னு பாக்க, பொயக்காத்தே அடிச்சாலும்,

மனசுல எளம இன்னும் நெறஞ்சு கிடக்கு. வாரும் ஒரு கை பாத்துரலாம்!

குனிவித்த பனை

குறுக்கும் நெடுக்குமாய் வெடித்த வரப்பு!
கடந்து சென்றால்,
வறண்ட வயக்காட்டின் ஒரத்தில்,
உயர்ந்து நிமிர்ந்து நிற்கும், ஒற்றை பனை மரம்!

சற்றே குனிந்து விலகினேன்.
மரமே, நீர் இன்றி யாம் இல்லை,
ஆனால் நீர் மட்டும் எப்படி,
நீர் இன்றி நெடு நாட்களாய், நெடு நெடுவென...?

Sunday 31 July, 2011

ஆடி

தீ மிதித்து, கூழ் ஊற்றி
குழாயில் ஈஸ்வரியின்
ரீங்கார இசையை இரைச்சலாக்கி,
பொது போக்குவரத்தை, போகா வாராததாக்கி;
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்,
புதிய தலைமுறையினரின்
குழப்ப வெறுப்புக்களாக்கும் புதிய பழக்கம்;
ஆம்,
ஆடி வந்தால்,
சென்னையும் சேர்த்து பல இடங்கள்
ஆடிப்போய்த்தான் கிடக்கின்றன!...

Wednesday 27 July, 2011

மீதமான இருள்

வெயிலில் காய்ந்து,
உழைத்துக் களைத்து
இரவில் தலை சாய்ந்து விட்டத்தை நோக்கினால்,
காலை என்னை சுட்டெறித்த கதிரவன்,
மறைந்திருந்து அழைப்பு விடுக்கிறான்
...
ஓய்வு எடுக்க இன்னும் ஒரு சில,
இருட்டுத்துளிகள்தான் மீதமென்று!

Thursday 21 July, 2011

நீயா...?நானா...?

முகமூடி வாழ்க்கை...
ஒட்டி உறவாடுதலில் சிரிப்பு,
'உச்' கொட்டுதல், உச்சிமுகர்தல்,
நாவினால் மனங்களை புண்படுத்துதல்;
முகத்திரை கிழித்துக்கிழிந்தால்...
அந்தரத்தில் வாழ்க்கை, அமைதிப்புயல்,
கருமேகம் சூழ்ந்து சிந்தும் துளிகளை,
வெற்றிடத்தில் வெட்டவெளியில் ரசித்துக் குதித்துத் திளைத்தல்,
லேசாக்கிய மனத்தை இளைப்பாற்றுதல்... இன்னும் பல?!...

Wednesday 20 July, 2011

நான் தூக்கியெறிந்த தோழி!

தோழி,
நீ எனக்கு தோழியாவதற்கு,முன்னொரு காலத்தில்,
உனைக்கண்டேன்...
உன் நட்பு வட்டாரத்தைக்கண்டு துனுக்குற்றேன்!

உன் காலடியில் விழுந்து, தம் கால நேரத்தை
இழந்தோரைக் கண்டு, வருந்தினேன்!
அப்படியும் உனை நாடி,
உன் உதவியோடு பிணைத்துக்கொண்ட,
உன் நட்பு வட்டாரத்தைக்கண்டு பரிதாபப்பட்டேன்!

உன் நட்பில் சிக்காமல் சிலபல ஆண்டுகள்;
நானும் தப்பித்துதான் வந்தேன்!

அந்த ஒரு பொழுதில்;
நீ என்னில் வந்த தருணத்தில்,
உனைக்கையில் வருடிய,
உச்சிவெயில் வேளையில், 

ஆம், அந்த ஒருபொழுதில்,
விழுந்தேன், உன் வலையில்...!

உன் அழகும், திறமைகளும் கண்டு சிலிர்த்தேன்;
தோழி, உன் கட்டுக்குள்
என்னையும் அணைத்துக்கொள்ளென,
உள்ளுக்குள் பல முறை அரற்றினேன்!

முடிவில், அணைக்கப்பட்டேன்,
உன் கடைக்கண் பார்வையில் நுழைந்த
என் அரற்றல் அபிநயங்களை, நானே மெச்சிக்கொண்டேன்...

காலங்கள் கடந்தன;
உன்னால், என்னோடு பேசுவதற்கே
சிரமப்பட்டவர்கள் எல்லாம் மகிழ்ச்சி கொண்டனர்!
சந்தேகமேயில்லை, நானும் கூடத்தான்!!

மேலும் பலமுறை,
சூரியனும் சந்திரனும் எழுந்து வீழ்ந்தனர்;
அந்தோ! வெகு தாமதம்!

இப்பொழுதுதான் உணர்கிறேன்,
என் வாழ்வை, நான் வாழ்ந்து
திளைத்திருக்க வேண்டிய தருணங்கள் எல்லாம்,
என் கையில் உன்னை அணைத்ததால்
கானல் நீராய் காணாமல் போனதுவேவென...
இப்பொழுதுதான் உணர்கிறேன்!

ஒரு வழியாய் முடிவெடுத்து விட்டேன்!
நிச்சயமாய், உலகில் பல கோழைகள்
எடுக்கும் முடிவுகள் எதற்கும்,
நான் தயாரில்லை!


பல கட்டுப்பாடில்லாத அலைமனங்களுக்காக,
உன்னை அழிப்பதற்கு எனக்கு இயலவில்லை.
மேலும், உனக்காக எதற்கு என்னையே நான் இழக்க வேண்டும்?

ஒரு வழியாய் முடிவெடுத்து விட்டேன்!
நிச்சயமாய், உன் நிலை பற்றி எனக்கு கவலை இல்லை.
உன்னைக் கை கழுவிவிட வேண்டியதுதான்!
உனக்குத்தான், உன் காலடியில் தம்மையே சமர்பித்த
இன்னும் பலர் இருக்கின்றனரே!

ஒரு வழியாய் முடிவெடுத்து விட்டேன்!
நிச்சயமாய், உன்னை தூக்கி எறிந்துவிடவேண்டியதுதான் என
முடிவெடுத்து விட்டேன்!

என் அருமை செல்பேசியே, என் கைப்பேசியே!!

Thursday 24 March, 2011

கதவே, நன்றி!

நிச்சயமாய் நடத்திவிட வேண்டும்...
ஆம், நான் மட்டுமே செய்தால்தான்,
இனம்புரியாத அந்த இம்சையிலிருந்து விடுதலை.
நடத்திவிட வேண்டும் தான்!

உள்ளமும், உடலும் வேதனையடைய,
நிறுத்தப்பட்டேன் வாயிலில்.
அடைத்த கதவும், இரைத்த நீரும்...
முயற்சி கைகூடவில்லை தற்காலிகமாக.

வாய்ப்பு சிறிது நேரத்தில் கைகளில்!
கதவும் திறக்கப்பட்டது...
...
...
...
கழிவறையின் கதவே, நன்றி!

Thursday 17 March, 2011

வேகப்பெண்ணே!

திக்கு தெரியாத காட்டில், திணறி தவிக்கும் தென்றலே,
வர இருப்பதுவோ நல்வசந்தம்;
உன்னை நிச்சயம் வருடிக்கொண்டாடும் நேசத்துடன்
அரவணைக்கும்... காத்திரு!

துளிகளைத் துடைத்து தூக்கி எறிந்துவிடு,
வாட்டும் சொற்களும், வருத்தும் பார்வைகளும்,
கதற கதற, துச்சமாய்த் தூற வீசிவிடு,

சிறு பெண்ணே, இனி உன் கையில்,
ஆம், உன் கையில் மட்டும்தான்...
உண்மை! உன் மெய்!

வரிகளின் மூலம்: நடப்பவைகளினால் எரிச்சலுடன் விரக்திகொண்ட இளம்பெண்ணிற்காக...!

Tuesday 1 March, 2011

உயிர்வசந்தம்

மல்லிகைப் பாதங்கள், பிஞ்சுவிரல்கள்,
உணர்ச்சி வேகம் துடிக்கும் 'பச்சிளம்' மனங்கள்...
உள்ளத்தினை உறுதிஉளியாக, உயிர்வசந்தக் குதிரையைக்
ஒழுக்கக் கடிவாளம்கொண்டு தூரசெலுத்தி வெல்ல...
கைகுலுக்கி, வாழ்த்தி, உச்சிமுகர்ந்து உவகைகொள்ள ஆசை!!

வரிகளின் மூலம்:முந்தைய வலைப்பூவின் சூழல்

Sunday 27 February, 2011

கானல் பாசம்

பற்பல குழந்தைகள், பளிச்சென்ற வெகுளித்தனங்கள்,
விரைத்த கர்வங்கள், வீம்பான முறுக்குகள்!
தாயா, தந்தையா, அண்ணணா, , தங்கையா
இனம்புரியா ஒட்டுப்பாசம்...
நிலையில்லை என்பதுமட்டும் கண்கூடு!

வரிகளின் மூலம்:
மழலைச்செல்வங்கள் மத்தியில் ஆசிரியப்பணியளிக்கப்பட்ட ஓர் உள்ளத்தின் எண்ணங்கள்!

Wednesday 19 January, 2011

பாரம்

உருவான அகத்தைவிட்டு - இந்த
மண்ணுலகுக்குள் நுழைந்த உன்னை,
என் கையில் வாங்கிய பொழுதுகளில் -
நீ,
பாரமில்லை...

வளர்ந்து நின்ற நாள்தொடங்கி
நடந்து விளையாடி
என் தோளில் சாய்ந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

ஓடிக் குதூகலித்து, ஓய்ந்து சாய்ந்து,
உறங்கி ஆடிக்கழித்த சிறுவனாய்,
உன் ஒழுகும் மூக்கும், சைக்கிள் சிராய்ப்புகளும்,
என் மனதோடு பகிர்ந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

பள்ளியில் செய்த குறும்புகளோடு
படிக்கப்பிடிக்கா எரிச்சல்களையும்,
வீட்டில் சேர்த்து வைத்து,
வீண் பிடிவாதம் பண்ணிய பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

உன் வாலிபத்தை,
கணக்கில்லா மகிழ்ச்சியோடும், சிலபலரின்
எண்ணில்லா இகழ்ச்சி மொழிகளோடும்
பார்த்துக் கடந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

உன் கல்லூரிக் கல்விக்குத் முயன்று,
பின் பணத்தைத் தேடித் தவித்து-
அதிலும் வென்று, அந்த ஐந்து ஆண்டுகளும்
வெட்டிய இடக்கை நகங்களாய் கழிந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

திருமண வயதாய் நீ கருதிய நேரத்தில்
விரும்பிய பெண்ணை வீட்டுப்பெண்ணாய்
பெற்றோருக்கே உரிய சிறு கர்வத்தில்
சின்னதொரு மறுப்பின் பின், 'சரி' சொன்ன பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

ஆனால்,
காலை நாலுமணிக்கு, கால் கடுக்க,
பேத்திக்கும் உமக்குமாய் வேண்டுமென,
பால் வாங்க வரிசையில்
நின்று,
களைத்தும்...

தவறாமல் நடந்து,
பதம் பார்த்து,
வயிற்றுக்குத் தேவையாய்,
காய்கறிகளை வாங்கி வந்தும்,

வெயிலில் அலைந்து,
மின்சார தொலைபேசி கட்டணத்தைக் கட்டி,
வறண்டும், துவண்டும்
ஒருவழியாக வந்து சேர்ந்தால்,

வயோதிகத்தில் தவித்து,
இயலாமையால் இம்சிக்கும் என் உடலோடு நான்.

மகனே, என் உணர்வுகளோடு விளையாடும்
உன் நா மட்டும் உன்னோடு!
புண்களும் ரணங்களும் என்னோடு!

வாழ்த்துக்கள்!... வயிற்றெரிச்சலோடு அல்ல!
பெற்ற பாசத்தோடு, வளர்த்த நேசத்தோடு!!

வரிகளின் மூலம்:
மகனின் எரிச்சல்களையும் கோபங்களையும் அனுபவிக்கும் பல முதியோர்களில், ஒருவர்!