Sunday 8 April, 2012

என் பள்ளி : சிட்டி ஸ்கூல் (பாகம் 1)

விழிமூடி முன்யோசிக்க;
திரைமுன் நிழலாடும் நிசப்தம்,
உடன் அழைத்துச்செல்லும்,
மெல்லுதிர நினைவுகள்...

அழுது அழுது சென்ற முதல் பள்ளி,
குறுக்குத்துரை சிட்டி ஸ்கூல்!
கூடை தூக்கிக்கூடவே வரும்,
லச்சுமி ஆயாக்கா சொல்லும்

எரிச்சல் வந்த அழகு, 'பச்சத்தண்ணிமா..ல...'!
வகுப்பு இடைவெளியில்,
பக்கத்திலே ஓடும் ரயிலின்,
முகம் தெரியா உயிர்களுக்கு, "டாட்டா"!

வரப்பில் பரித்துண்ட வெண்டை,
திடீர் குதூகலங்கொடுத்த,
பள்ளியின் வாசல் சறுக்கு,

வியர்வைத்துளி கொடுத்திழுத்த,
ரிக்சா மாமா எசக்கி;
பார்த்து ஓட்டி 'ஹோய்' போட்ட,
வெண்தாடி சுடலை தாத்தா;
(தொடரும்)

என் பள்ளி : சிட்டி ஸ்கூல் (பாகம் 2)

இன்றும் நினைவு கொள்ளா…

அதிகாரமாய் தோன்றிய,
'ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்' வேலா மிஸ்;
'மெஷினை' மாசின் என மாற்றிக்கொடுத்த
'செகண்ட் ஸ்டாண்டர்ட்' வெயிலம்மாள் மிஸ்

ஈரமான மனத்தோடு பார்த்த,
'தர்ட் ஸ்டாண்டர்ட்' பார்வதி மிஸ்;
சிறப்பாய் மனங்கவர்ந்த
'ஃபோர்த் ஸ்டாண்டர்ட்' ப்ரேமா மிஸ்;
அதிரடியான மென்மையாய் அதட்டும்,
'ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட்' லோகநாயகி மிஸ்;

நாற்றாய் ஊன்றிய,
ஆயக்கா நாச்சியார் முதல்,
ஹெட் மிஸ்ட்ரஸ் ரொஜாரியோ வரை;

தினம் மாலை நான்கு மணிக்கு, வீட்டுத்
திண்ணையிலேயே கழித்து
ஓரங்கட்டிய வீட்டுப்பாடங்கள்;

முடிக்காமல் போன வேலைகளை,
நகாசு வேலைகாட்டி நடித்து,
பலசமயமும் தப்பித்தும்
சில சமயம் கொக்கிப்பிடியில் சிக்கியும்
கழிந்த நாட்கள்;

ப்யூன் மணியண்ணனுடன்
வீடு வரை வந்தெடுத்த, பாடம் முடிக்காத,
ஏரோப்ளேன் அட்டைப்படம் போட்ட ,
ஸோஷியல் சயின்ஸ் நோட்டின் அழியாத நினைவுகள்…

தினம் தோறும் வழிந்து வாங்கிய,
அம்மாவின் கையெழுத்து…
ப்ளூ கலர் அட்டை 'ஹோம்வொர்க் டைரி'!;
பரீட்சை தோறும் வந்த,
பிஸ்தா பச்சை ப்ராக்ரஸ் கார்ட்!
(தொடரும்)

என் பள்ளி : சிட்டி ஸ்கூல் (பாகம் 3)

பிரமநாயகமும், லலிதாவும்,
செல்வீஸ்வர மூர்த்தியும், அழகுபெருமாளும்,
கிரிசங்கரும், அழகு மீனாட்சியும்,
சாந்தியும், ரேவதியுமாய்
கழிந்த வார நாட்கள்…

ஹரியும், பாக்கியும்,
லலிதாவும், சுதனும்,
அழகு மீனாட்சியும், பொன்னையாவும்,
அண்ணனும், அவன் கிரிக்கெட்டும், சுப்பாச்சியுமாய்
கழிந்த மாலைகளும், வார இறுதிகளும்…

நெருஞ்சி முட்களும்,
ரோஜா இதழ்களும் என,
நிறைவாய்க் கொடுத்ததே அந்த பால் பருவம்.

“ரோஹினியுடன் பரத நாட்டியம் முடியுமா?,
உனக்குத்தான் ஆட வருமே, முடியுமே!”
அஞ்சாப்பு டீச்சர் ஊக்கப்படுத்தியதும்,
“முடியவில்லையே மிஸ்”, என மறுத்ததும்…
தெளிவான நிழலாய் ஆடுவதும் அதிசயம்,

இறுதியாண்டின் பள்ளி ஆண்டுவிழா…
முத்தாய்ப்பாய் நடந்த சுனிலின்
துள்ளல் டிஸ்கோ!

அண்ணனினால்,
அப்பாவால் தேர்ந்தெடுக்க அவசியப்பட்டு,
ஏழு வருடங்கள் கழித்த சிட்டி ஸ்கூல்…
இமை மூடி மனத்திரையில் உதறி யோசிக்க,
அருவியாய்க் கொட்டும் இனிய
சிறு உலகமாய் அமைந்த அந்த,
மொட்டு மலர்ந்த நாட்களும்
அதன் நினைவுகளும்! ஆம்,
இனி நினைவுகளில் மட்டுமே...
நிரந்தர குதூகலம் அந்த மழலைக் காலங்கள்!
(நிறைவு)

Saturday 7 April, 2012

நட்பை... ஆம், நட்பைக் கேட்கிறேன்!

நண்பா...
தாமதமாகிவிட்ட வாழ்த்துக்களுக்கு,
மன்னிப்பு கேட்டால், நம் நட்புக்குக் களங்கம்!
கேட்காமல் விட்டால் நம் மரியாதைக்கும்..., 
ம்... அதுவேதானே!

ம்.. என்று தொடரவும்;
ம்ஹூம்... என்று மறுக்கவும்,
மனக்கூடு இடந்தர மறுப்பதும்,
நியாயம்தானே!

நித்தம் நல் நித்திரை,
விழித்திரை தழுவும் வரம்பெற்ற நாம்...
விழி திறந்த காலத்தில்,
நன்றி நவிலக்கூட இதழ் விரிக்க விழையாது,
மௌனங்கொள்வதும் ஏனோ?
தமிழும் பயணமும் பாணியும்,
நின் புனைதலில் தோன்றிய எழுத்துக்களாய்
கண்களுக்கு விருந்து படைக்க...
நாம் காலங்கடத்தி காத்திருப்பது,
குளிரிருட்டுப்பகலவனா? பகல்வெம்மைச்சந்திரனா?

காலந்தாண்டி பொறுத்துரைக்கும் வாழ்த்துக்கள்.
இருப்பினும் அவை வாழ்த்துக்கள்!

வரிகள் மூலம்: தவற விட்ட வாழ்த்துக்களைத் தாமதமாய்ச் சொல்ல விழைந்த நட்புக்காக!