Wednesday 19 September, 2012

மலையும், மழையும்!


விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. முந்தைய இரவினை முழுவதும் ஆக்கிரமித்து, அதிரடியாய் கொட்டித்தீர்த்த கார்த்திகைமழை, பதித்துச் சென்ற தற்காலிக தண்ணீர் குட்டைகளை, தனது முதல் மாடி வீட்டு பால்கனியிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தாள் மத்ரிமா. கண்டறிய முடியாத நரம்புப் பிரச்னையினால் கடந்த இரண்டு வருடங்களாக கட்டிலையே தனது உலகமாக்கிக்கொண்ட அவள் தாய் சுந்தரி, அந்த அதிகாலைக் குளிர் காற்றின் தூண்டலினால் சற்று அதிகமாகவே முனகினாலும், மத்ரிமாவின் புறலயிப்பு ஏனோ விடைகொடுக்கவில்லை! "கையில் பீங்கான் கோப்பையில் ஆறிக்கொண்டிருந்த காப்பியின் நினைவுகூட வராமல், அப்படி என்ன மத்ரிமாவிற்கு ஆர்வம் வெளியில்"... அம்மாவாய் எழுந்துசென்று ஒரு செல்ல அடியோடு கேட்கத்தோன்றி, முடியாமல், சிறிது புன்னகையோடு மட்டும் மறுபடியும் உறங்கத்தொடங்கினாள் சுந்தரி. இன்று சனிக்கிழமை. இந்த விடுமுறையிலும் கூட அவள் நினைவுகளைக் கலைத்து கலவரப்படுத்த வேண்டாமென எண்ணியிருப்பாள் போலும்.

புரண்டு படுத்து மீண்டும் அசந்து விட்ட அவள் தாயை அந்த ஒரே மகள்தான் தாங்கித் தாங்கி கவனித்துக்கொண்டிருக்கிறாள். அலுவலக நேரம் மட்டும் அவளுக்கு உதவ, அவள் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தவள்தான் இனியம்மா. எத்தனை பேர், எத்தனை யோசனைகள், எத்தனை உத்தரவுகள், எத்தனை நேர்முகங்கள்... முடிவாய் மத்ரிமா முடிவு செய்தவள்தான் இனியம்மா. பேரைப் போலவேதான் பேச்சும், பழக்கமும், அணுகுமுறையும். சட்டென மரியாதை கொள்ளும் கம்பீரத்தோற்றத்துடன் ததும்பும் கனிவும், யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் இனியம்மாவை?! கல்லூரிக்குச்செல்லும் மகளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டு, ஒவ்வொரு வார நாள் காலையிலும், மத்ரிமா அலுவலகம் செல்லும் முன் 'டான்' என வந்துவிடும் பாங்கு, இனியம்மாவிற்கு இணை இனியம்மா மட்டும்தான்! சனி, ஞாயிறு விடுமுறை என்றாலும், மத்ரிமாவிற்கு அந்த இனியம்மாவுடன் ஒருமுறையேனும் பேசிவிடவேண்டும் என தோன்றும் அளவிற்கு குடும்பத்தின் பாச நரம்புகளின் பாலமாய் இருக்கும் ஒருவரை 'வேலையாள்' என கொச்சைப்படுத்த எப்போதும் மத்ரிமாவின் மனது இடம் கொடுத்ததில்லை. அதனால்தானோ என்னவோ, அவள் மட்டும், எப்போதுமே கொஞ்சம் அழுத்தமாக 'இனி - அம்மா' என்றுதான் அழைப்பாள்!

அரசு, குழந்தைத் தொழிலாளராய்க் கணக்கில் கொள்ளாததர்க்காக நிர்ணயித்திருக்கும் குறைந்த பட்ச வயதை சரியாக எட்டும் போது, தனது தந்தையை எதிர்பாராத விபத்தில் பறிகொடுத்ததும்,  மனம் தளராமல் தன் தாய் சுந்தரி எடுத்த முடிவுதான் மத்ரிமாவை இன்று இந்த அளவு தைரியமானவளாகவும், சுத்தமும், சூதும் நிறைந்த உலகை எதிர்கொள்ளத் தெளிவானவளாகவும், சொந்தக்காலில் நிற்கத்தூண்டுவதாகவும் அமைந்தது. பெரிதாக ஒன்றும் இல்லை என சிலபேர் 'உச்' கொட்டிக்கொள்ளலாம். ஆனாலும் அதுவரை கடை கன்னிக்குப் போய் பழக்கப்படாத சுந்தரி, தன் கணவரின் பணியை அந்த லஞ்சம் விளையாடும் அரசு அலுவலக மேலாண்மை அதிகாரிகளிடம் போராடிப் பெற்று, கடன் காரர்களிடம் மன்றாடி அவகாசம் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக மத்ரிமாவின் கல்வி நிறைத்து, வேலைக்கும் வழி செய்து ... அப்பப்பா, சுந்தரியின் பம்பரவாழ்க்கை எத்தனை பத்திகளிலும் அடக்க முடியாது! 

தந்தையோடு கழித்த பதினான்கு வருடங்களில், குழந்தையாய், சிறுமியாய், விடலைப்பெண்ணாய் மத்ரிமா கற்றதும், அறிந்ததும், அனுபவித்ததும், வாழ்ந்ததும், மகிழ்ந்ததும், மற்றோரு பெண்ணிற்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேம்தான். அந்த மகள், தன் தாயுடன் கழித்த பொழுதுகளைவிட, அந்த தந்தை தன் மகளுடன் கழித்த பொழுதுகள் நிச்சயம் அதிகம்தான். அந்த பிணைப்பு ஒன்றுதான், அன்று அவள் மௌனமாய் கதறிய நாட்களில் அவளை அழியவிடாமல் பார்த்துக்கொண்டதும், இன்று உறுதிகொண்ட ஒரு  வெற்றிப் பெண்ணாய் வலம்வரச்செய்வதும். 

அதெல்லாம் சரி, இது எப்போதும் பெய்யும் மழை, எப்போதும் தேங்கும் தண்ணீர்... இன்று மட்டும் அந்த குட்டைகளில் என்ன சிறப்பு? போதிய அளவு பணம். அறிவிற்கும், வாழ்க்கைக்கும் என நல்ல வேலை, நெருக்கமான இனியவர்கள். இருபத்தியாறு வயதில், இந்த நாட்டின் தற்போதைய சூழலில் வளர்ந்தவளுக்கும், அவளுக்கு துணையாய் இருக்கும் தாய்க்கும் ஆழ்ந்த யோசனையில், வேறு என்ன இருக்கமுடியும்? 

...
...

அவ்வப்போது விருப்பத்துக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், சிறுவயதில் தந்தை ஊக்கப்படுத்திச் சேர்த்துவிட்ட ஓவியப்பயிற்சியில் கற்றுக்கொண்டதை வைத்து, தான் செய்த பல அளவிலான ஓவியங்களையும் சிற்பங்களையும் ஒன்று சேர்த்து கண்காட்சியாக வைத்து மற்றவர்களுக்குத் தன் திறமையை வெளிப்படுத்தவும், அந்தக் கண்காட்சி மூலம் பொருள் ஈட்டவும் பல சமயங்களில் யோசித்து கைவிட்ட விஷயம்தான் அது. இப்போது இனியம்மா வாயிலாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. நனவாக ரொம்ப நாட்கள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. இனியம்மா மகள் கல்லூரியின் முதல்வர் வாயிலாக கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்திக்கொண்டு, நல்லதொரு கூடத்தில் பத்து நாள் கண்காட்சியாக நடந்தேறியது. ஓவிய நிபுணர்களின் புகழாரங்களும், பத்திரிகைக்காரர்களின் பாராட்டுக்களும், ஓர் இரவில் அவளை, புகழிலும், பணத்திலும் உயர்த்தின. 

கண்காட்சி, நேற்றோடு நல்லபடியாக நடந்து முடிந்து, அனைத்து படைப்புக்களும், நகரில் முக்கிய இடங்களுக்கும், தனியார் சொத்துக்களை அலங்கரிக்கவும் சென்றுவிட்டன. இன்று மத்ரிமா அந்த குட்டைகளைப் பார்த்தபோது, 
"என்னைக்காவது ஒரு நாள் நீ, பெரிய ஆளா வருவம்மா! அன்னைக்கும் நீ, உன் தலைக்கு மோகத்தையும் போகத்தையும், எப்பவுமே நிச்சயமா கொண்டு போக மாட்ட! நீ கலங்காத குட்டை, அலம்பாத குடம், கலையாத வைக்கப்போர்... நீ எம் பொண்ணும்மா..." 
தீர்க்கதரிசியாய் அவள் அப்பா சொன்னது, அவள் காதில் அசிரீரியாய் ஒலித்தது!  "அப்பா, நான் உங்க பொண்ணுப்பா" மனதிற்குள் சொல்லிக்கொண்டிருந்தாள் மத்ரிமா!

"டிங் டாங்..."    
ஒரு பெரும் வி.வி.ஐ.பி யின் தனி ஓவியத்தை எழுத,
அவர் பி.ஏ, ஒரு பெரும் தொகையைக் கொண்ட காசோலையோடு வாசலில்.

வெளிச்சம் அதிகமானது, சாலையில்
வாகனங்கள் நகரத்தொடங்கின, சாலையில்
குட்டைகள் கலங்கத்தொடங்கின!

சற்றே அதிக வேகத்தோடு, 
திறந்த வாசல் கதவைத் தாண்டி அடித்த காற்று, 
சுவரில் தொங்கிய அப்பாவின் படத்தைத் திருப்பிப்போட்டது!..