Saturday 14 December, 2013

பணிப் பயணங்கள்!

வந்து நின்று கூறியதும்,
சென்று நின்று உரைத்ததுவும்,
சமயங்க ளெல்லாம் மெய்மறந்ததுவும்,

சின்னக் சின்னக் குழந்தைகளுக்கு
நேரத்தைப் பகிர்ந் துடுத்தி,
ஒய்யாரச் சிலிர்ப் பழகைப்
பார்த்து பார்த்து ரசித்ததுவும்,
வந்தமர்ந்து மறித்ததம் சோகங்களை
பகிர்ந் தெடுத்துக் கேட்டவைகளும்.

நம்பிக்கையின் நாணய மெனவர்தம்
மனமெண்ணும் வகைக்குவாழ எம்
மனந்தன்னை மெருகெடுத்திய,

செத்துப்போன மாதங்களில்,
வாழ்க்கை அர்த்தம் கொடுக்கும்
செதுக்கியடுக்கிய நிம்மதிச்செங்கற்கள்,
எம் பணிப் பயணத்துளிகள்!!


அப்பத்தா மனசு!

வெள்ளிக்கு திங்க
விடியல் கொடுக்கா தேத்தா,
சனியனே வந்து,
சந்தோசமா வசைக்குது!

ஞாயித்துக்கு நெதமும்
எடங்கெடைக்கா உச்சிவெயில்,
முத்துப்பேச்சிக்கு விக்கிக் கொடுத்த
கம்பங்கூழு கவிச்சதுவும்,

ஒம் மூளைக்குள்ள
கூவித்தொலைக்குற வயித்துக்கு
இக்கினியூண்டு ஊத்துமய்யா!

கருங்குயில்குஞ்சு

சொடுக்கு நேர சொற்ப சுகங்கள்,
விந்தை துளிகளுக்கு விண்ணுயிர விலைகள்,
கூடாரப் புயலுக்கு காலடிக்குள் மூளைகள்,
கடற்கரை கடந்தால் பறந்திடும் அகிலங்கள்!

Friday 11 October, 2013

என் 'சத்திரம்' - சமூக வலைதளம்


நான்
என் மனதில்,  
எனக்கு தோன்றுவதை
எனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில்
எனக்கு வாய்த்த நேரங்களில்
எனது பாணியில்
நானே எழுதியேத்துவது...! 
இதில் 'சமூகம்' எங்கிருந்து வருவது?

என் 'சமூக' மனது: 
"டேய், பார்வைய மாத்து...!"

Tuesday 24 September, 2013

கொழந்தைங்க

'எனக்கு கொழந்தைங்ககிட்ட பிடிக்காத ஒரே விஷயம்,
என்னன்னு சொல்லுங்க பாப்போம்? ' - நண்பர் ஜான்

'ரொம்ப அழறது?'
'சில நேரங்கள்ல பிடிவாதம் பண்றது?'
'படுக்கைய ஈரமாக்கிடுறது?'
...அடுக்கிய நான்

'...ம்ஹூம் ... அவங்க பெரியவங்களா மாறிடுறது...' - நண்பர் ஜான்

'......' - நான்

எவ்வளவு பெரிய துக்கமான உண்மை?!
குழந்தைகள், வருட நொடிகளுக்குள்,
குழந்தைத்தன்மை அற்றவர்களாகி விடுகின்(றோமே)றனரே?

Saturday 31 August, 2013

தேடலுடன்...

நித்திரைக்கு விடைகொடுக்க
நினைக்கும் பொழுதெல்லாம்
எனக்கு நன்றாக, தூக்கம் வருகிறது!

வணங்கி வணங்கி,
தலைசுளுக்குத்தான் மீதமானது;
இன்னும் விடியல் வரவில்லை!

கதிரவனே!
உன் சுடுவெளிச்சம் என்னுடலின் உப்புநீரை,
அதிகாரமாய் பிழிந்தாலும்,
என் நினைவுகளை மறியேன்!

நற்சுற்றமே!
நின் விட நகங்கள் என்னகத்தின் குருதிக்குளத்தை
கலந்துவிட்டு பிதுக்கினாலும்,
என் திடங்களை அழியேன்!

புதைந்த ஞானத்திற்கு,
இதோ என் அன்பளிப்பு!
தீர்க்கமாய் உள்ளகத்தில் வைத்துப் பராமரித்துக்கொள்ள,
இந்த நயமான நல்வாழ்க்கை!

Wednesday 29 May, 2013

மறைகின்ற தோற்றங்கள்!

விளம்பரங்களின் கவர்ச்சிகள்,
வியாபாரத்தின் மகிழ்ச்சிகள்,
மனங்களின் குழப்பங்கள்,
மனிதர்களின் இழப்புகள்!

நிறைகின்ற வங்கிக்கணக்குகள்,
உயர்கின்ற கட்டிடங்கள்,
வளர்கின்ற குறுங்கூட்டுகள்,
குறைகின்ற பந்தங்கள்!

பொய்க்கின்ற மழைமேகங்கள்,
காய்கின்ற வயல்வெளிகள்,
வீழ்கின்ற விவசாயிகள்,
வீணாகும் வாழ்க்கைகள்!



Saturday 25 May, 2013

வெறுங்காயம்

வீரம்வெளஞ்ச மண்ணுட்டுதான
கொதரக்கொதர கத்தலையோ?
யாருக்குமே தரமாட்டேன்னுதான
யார்கேட்டும் தரலையோ?

எல்லாமும் முடிஞ்சப்புரம்
எவனுக்கு எதுகெடைக்கும்?
செல்லாத காசப்போல,
சீவனுக்கு ஆகாரம்!



தேடல் நண்டு

கடற்கரை ஓரமா மெதுவா,
அழகா ஒரு 'வாக்கிங்'!
கூர்மயா கீழ பாத்தா,
சூட்டிப்பா ஒருமினி 'ரன்னிங்'!

'அடேங்கப்பா'ன்ட்டு உச் கொட்ட,
டக்குன்னு ஒரு 'ஹைடிங்'!
புது அலையில மறையுற,
வளைங்களுக்குள்ள ஒருவழி 'ஸேர்ச்சிங்'!

மறுசொல் மரணம்

முவ்வுட லேற்கவியலா முழுப்பந்த மில்லையென,
முக்கிமுக்கி பறைசாற்றும் முதுமனங்கள் நீவிர் வாழ,

மூத்தகுழு மான்பின்றி  பிரண்டதென நன்றுரைத்து,
சீத்தகுழு போன்றெனவே  இளையகுழு சுருக்குதென,

வேற்றுமைக்கண் கொள்ளவே வலியோடு ஈனப்பட்டு,
சேற்றுடனேதன் மொத்தமும் பிணியோடு ஏற்றப்பட்டு, 

தன் மனங்கழன்று செருக்கேற்றி குழப்பிக்குறுகி நினைந்து நோக்கி,
பொன் வழக்கழிய மெருகேற்றி சலம்பிசலம்பி விரைந்து மக்கி,

சூத்திரமுரைத்த ஏற்கவொவ்வா,
ஆத்திரமுடைந்த வேர்க்கையில்லா,

நாளும் நாளும் கடந்து போக,
நீளும் நீளும் நாவும் சாகும்!

Sunday 12 May, 2013

ஏக்கவணக்கம்!

துருவித்துருவித் தேடுகிறேன்,
இவ்விடம் நெருக்கும் அடுக்கக தங்கல்களில்,
நான் கண்டு தொலைகின்ற இனிமைவாழ்வுதனை!

உருமித்திமிறி கதறுகிறேன்!
எம்மகன் தொடுக்கும் சுளீரென்ற வினாக்களில்,
அவன் கண்டு கரைகின்ற குழந்தைத்தனத்தினை!

யாம் திளைத்து வளர்ந்த வயல் வரப்பும்,
மாட்டுவண்டியும், வைக்கப்போர் விளையாட்டும்,
அது கொடுக்கும் அரிப்பும்,
நீர் திரண்டோடும் நதிக்கரை விளையாட்டும்,

மண்டையைப் பதம்பார்க்கும் அருவிக்குளியலும்,
ஆலம்விழுது ஆட்டமும், சுடுகொட்டையும்,
அது பொக்கும் வலியும்,
கோலி சோடாவும், தாத்தாக்கடை இஞ்சி மரப்பாவும்

இன்னும் வாழச்செய்த பலவும்,
இனி கானல் நீரின் தடங்களாய் மட்டும்,
அவனுக்கு கற்பனை கொடுக்கும் அத்தியாயங்கள்!

சோட்டாபீமும், டோரேமானும்,
நிரந்தர நண்பர்களாய்
ஏற்றுக்கொண்டு வாழத்தொடங்கி,

ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்
முவ்வேளை உணவுகளாய்
ஏற்றுக்கொண்டு புசிக்கத்தொடங்கி,

அவனும், போன்ற இன்னபிற பிராயத்தினரும்
மனிதம் மறந்து, இயந்திரம் ஏற்று,
வேகத்திற்குள் மெதுவாய்க் கரைவதற்கு,
கடுமையாய் முயற்சிக்கும், எம்போன்ற பெற்றோர்களுக்கு,
சகவணக்கம்!!

Sunday 5 May, 2013

தீ செண்டிமென்ட்

எம் முக்கிரகங்கள் வரவேற்க, ஜுவாலை கொடுத்தாய்!
எம் மனங்களினைந்த நாள்முதலாய், வயிறு நிறைத்தாய்!

மாற்றலுக்காய் வண்ணத்துப் பூச்சிவாரிசினை, நின் சேவை
ஊற்றினைக்கை வண்ணங்க ளூற்றிவாரிபிணைத் தில்தேவை
நிறைக்க விட்டுச்செல்லும் சூரியா ஐகானே!

விழிபணிந்த நன்றியோடு நவில்கிறேன்,
எத்துணையுரைத்தாலும் ஈடில்லா  பல நன்றிகளை!
வாழிய நீ வாழியவே!

Thursday 18 April, 2013

போரில் இழந்த புனிதம்!

இரு வயதில் கிடைத்த,
பெருத்த ஓர் உபதேசம்,
இடக்கை அபசகுனம்;
வலக்கை மிகப்புனிதம்!

ரெஸ்ட் ராண்ட்டில், பக்கத்து நாற்காலி
நண்பர் ஜெனரல், இடதுகை ஸ்பூனில்
உணவு உண்ணுகிறார்..
போரில் இழந்த புனிதம்!...

இந்த சகுனங்களெல்லாம், கொடூர
அபசகுனங்களாய் கண்முண்ணே!


செந்தி-டமணி

குலமோங்க, இடர்மெய்
நலமோங்க நிலைமனப்
பலமோங்க, நன்செய்
செழிப்போங்க நின்சொல்
அடப்போங்க ண்ணே.. சும்மா விளையாடி கிட்டு... ஹி ஹி ஹி!

Thursday 11 April, 2013

கலைநட்பு

பத்தாய்க் கழிந்த நவமும், அறு
வெட்டாய்க் கழிந்த இரண்டும், இசைக்
கற்றாய் ஒளிரும் நாமமும்,  பலி
யிட்டால் மறையா மெய்யும், எனை

சுட்டால் மாறா மனமும், நமை
நட்டால் துளிரும் பதமும், நீர்
சொட்டால் நிறையும் விழியுமென, நான்
முட்டாள் மனமென விம்மி, பூமித்

தட்டால் தாங்கிய நாளில், சொல்
கற்றால் நீவாழ நினைந்தும், எனை
உற்றாள் வருந்து மெனவே, நா
நிற்றான் என்முன் னேயே! 

இறை

வெட்டிச்சிகரமே, அதர்மத்தை உதிர்க்க விழை!
நட்புக்களங்கமே, நியாயத்தை உமிழ நினை! தீ
மூட்டிய கருகலே, சாம்பலை தூவிக் களை! மெய்
காட்டி நீ அருகிலே, தெய்வத்தை திணித் தடை!

புத்துணர்வு மழலை

உரைக்க வைத்த நகைப்புகளுக்குள் புதைந்திருந்தன,
ஓராயிரம் முறைகளில் முகமூடியுரிக்கும் யுக்திகள்!

கனத்த தொண்டையை, நொண்டிக் கொண்டே
உரத்த குரத்தலில், சில ஆயிர டெசிபல்களை
காற்றிலுதிர்ந்து கலக்க விட்டிருந்தேனென
சுய நல மிதப்பில் மிதந்திருந்த மனதை...

உரைக்க வைத்த நகைப்புகளுக்குள் புதைந்திருந்தன,
ஓராயிரம் முறைகளில் முகமூடியுரிக்கும் யுக்திகள்!

Friday 5 April, 2013

நடக்காதென்பர்...

ஒட்டா கூட்டாய்,
ஓடிப்பிடித்து விளையாடி,
எட்டா சிட்டாய்,
ஏறிமிதித்து சொரம்பாடி,

உனை நிந்திக்க, என்னுள்
உணர்வுருளும், தருணம்
எனை நிந்திக்க, அவனுள்
தளரிருளும் கரணம்!

ஊர்தியுருளாய் நெருங்க இன்றே,
தீர்ந்தமனமாய் நகர வந்தே,
சொர்க்க நிலமாய் நிகழ்ந்த விங்கே,
சோர்ந்த சுருளாய் கரைந்த தடமே!

வரிகள் மூலம்:
கலைந்த கனவுகளுக்குள் கனவு காணும், அவசரகால ஆளும் மனம்


Sunday 31 March, 2013

பழமெதுகை வழக்கு!

பண் தொடுத்தலும் அவை விண் அடைதலும் விழுப்
புண் எடுத்தலும் அவர் கண் மறைதலும் இளம்
பெண்  கொடுத்தலும் பெரும் பொன் நிறைதலும் விழி
மீன் மடுத்தலும் குலம் சென் றறைதலும் என
பின் நடத்தலும் அதை முன் அறிதலும் எனில்
மண் சேர்தலும் நாம் நன் கறிவோம், வழக்கே!

Tuesday 26 March, 2013

ரெத்த சாயம்?!

பெரிய இவனோல நீயின்னு
கேட்டவுகள பாக்காம,
கங்கனங் கட்டி அந்தால
வீம்பா மொறச்சு நடந்தேன்!

வெளிச்சம் போன கருக்கல்ல,
சந்தைக்கு வந்து நின்னேன்,
பட்டெனத்துல கெடைக்கு மேண்ட்டு,
காசுசேத்துட்டு வந்தேன்!

மனசு நெறய ஆசையா,
பேரம்பேசி ஆளுக் கொன்னா,
பேத்தி பேரன் புள்ளங்களுக்கு,
பொம்மகுதிரயும் கலர் பென்சிலுமா,

எண்ணி எண்ணி பாத்த காச,
நீட்டி அவன்ட்ட குடுத்துபுட்டு,
நடைய கட்ட நெனைக்கும்போது,
கேட்டதுய்யா "டமார்...படார்"

கண்ணுக்கு ஒரே பொகமட்டும்,
காதுக்கு ஒரே கத்தல்மட்டும்னு,
எங்கெருக்கேன் ஒன்னும் தெரியல, அசச்சா
காலு நகட்ட ஒணரல!

தலயமட்டும் அசச்சுப் பாத்தா,
பலிபீடமா பூமி தெரியிதே?!
அய்யோ இந்த மனுசனெல்லாம்,
அலறி விழுரது வெளங்குதே?!

வேரென்ன செய்ய இப்போன்னு,
ஒருபக்கம் தோணுனாலும்!
ஒன்னும் புடுங்க முடியாதுன்னு,
மனசு என்னத் திங்குதய்யா!

போப்போரேன்னு தெரிஞ்சாலும்,
பாவிமனசு அடிக்குதய்யா!
தாத்தா தாத்தான்னு ஆசையா,
கூப்புடுதாப்போல கேக்குதய்யா!

உசிருக்கு சாயம்பூச முடியாம, இந்த
ஒடம்புக்கு சாயம்பூச நெனச்சுக்கிட்டு,
வந்துட்டாங்க மூதிமக்கான்னு மனசுகேக்குதே, அய்யா
ஒங்க ஆருக்கும் இந்தவலி கேக்கு..தா......?!

வெறுமை 'கூட்டல்' பெட்டகம்

எலும்பும், மக்கும்
சதையும், அனலை
நக்கும் உடலும் கொண்டே,

வருணும், சூரி
மகனும் பாரி
மலரும் எண்ணிக் கடந்தே,

விடியும் காலம்
என்றே விரட்டிக்
கவலை ஏற்றி பிறண்டே,

நகட்டிக் கழித்த
நாட்கள் நயமாய்
நன்றே முத்தம் ஈன்றே,

வெந்த காமமும்
நனைத்த பாசமும்
உயிரை உருக்கிச் சென்றே,

இருளில் துழாவி
மாயா உருவாகி
வந்து வந்து மறைந்தே,

பாங்காய் படிந்த
தாங்கு பூமியில்
சரித்திரம் பதிக்க நினைத்தே,

கேளாய் மனமே
நித்தம் நித்தம்
உன்னை மட்டும் வருத்தியே,

முடிவாய் எடுக்க
முடிவென நீயும்
நினைக்கும் வகைதான் விந்தையே!

Friday 1 March, 2013

மா பசி!

வயிற்றுப்பசிக்கு, தீனியிட
தடையிடும் தலைமைக் குடிகள்;

அறிவுப்பசிக்கு, அலைபாய
மறுத்திடும் வீணான தம்பட்டங்கள்;

தேகப்பசிக்கு, தீனியிட
வரவேற்கும் தலைமுறை ஜந்துக்கள்;

வெறுமைப்பசிக்கு, குழப்பிட
துடித்திடும் ஆசிரமக் குடில்கள்;

எப்பசி எங்குபார்த்து எவருறைத்து தெளிவுருமென,
எவ்வழி எடைபோட்டு எவர்கண்டு வழிவருமென,

அறியா மக்கள் மாக்களாகிப் புழுங்கா
விடியலில் இருள்விளங்கி மகிழ்ந்துழன்று
நடனமாடும் மெய்யும் நிறைவோ?
தலைவா!?

Wednesday 27 February, 2013

வாழ்க மனிதம்!

அடிக்கடி வரும் பசிக்கு, அகங்காரக் கடைகள்!
அயல்நாட்டு கலாசாரமாம் இந்த அங்காடித்தெருத் தொழில் முத்திரைகள்!

வாடிவதங்கி சுருங்கிக் கருகிப்போன வயிறுகள்;
கன்னடொக்கும் கருப்புக்கண்களுமாய் துவண்டுநொடிந்த தேகங்கள்!

வயிரெறிந்து வாழ்த்துகிறேன்!
வழக்கொழிய வாழ்த்துகிறேன்!

இம்மண்ணைக் கொலைசெய்யும் மனதுகள்,
தம்மனங்களை அலசிப்பார்க்க வாழ்த்துகிறேன்!

இம்மண்ணின் மானுடமே,
திரும்பிப்பார்க்க!

நிற்க!
வாழ்க மனிதம்!

சீ போ, ம'ன'தா!

நான் மரணிக்க மறுக்கிறேன்!
"போடா பொய்யா!", என்கிறதென் மனது!

வார்த்தைகள் சேரும்போது,
என்னை நான் குறிப்பிட விழையவில்லை!

ஆனால் ஆதியில் உதித்த நானோ,
"இல்லை, இல்லை" என்றரற்றுகிறேனோ?!

வரிகள் மூலம்: துறவு ஏற்க நினைத்துப் பின் குழம்பிய நிலை?!

Tuesday 5 February, 2013

(பெருங்)காயம்


குழப்ப நிலையில், மனிதம் இறக்கும்;
தாயா? மகளா?, உருவம் தெறிக்கும்;
தெய்வ வாசல்தான் அமைதியோவென
பொய்த்த கனம்நினைத்து,
எனைத் துருவியெடுக்கும்?!

வந்தாய் நின்றாய் நடந்தாய்; சொற்கள்
உதிர்த்தாய் கோர்த்தாய் எறிந்தாய்; கற்கள்
மழையாய் ஈட்டியாய் சாட்டையாய்,
பொழியப் பொழிய!!...

நன்றி, நன்றி!
தோலும் எலும்பும் இம்மியேனும் கிழியாமல்;
இதயம் மட்டும் குதறப்பட்ட மாயம்தனை கற்பித்தமைக்கு!

உன் மெய்க்காதலனாய் இன்றி,  உண்மைக்காதலனாய்,  நன்றி!