Sunday 31 March, 2013

பழமெதுகை வழக்கு!

பண் தொடுத்தலும் அவை விண் அடைதலும் விழுப்
புண் எடுத்தலும் அவர் கண் மறைதலும் இளம்
பெண்  கொடுத்தலும் பெரும் பொன் நிறைதலும் விழி
மீன் மடுத்தலும் குலம் சென் றறைதலும் என
பின் நடத்தலும் அதை முன் அறிதலும் எனில்
மண் சேர்தலும் நாம் நன் கறிவோம், வழக்கே!

Tuesday 26 March, 2013

ரெத்த சாயம்?!

பெரிய இவனோல நீயின்னு
கேட்டவுகள பாக்காம,
கங்கனங் கட்டி அந்தால
வீம்பா மொறச்சு நடந்தேன்!

வெளிச்சம் போன கருக்கல்ல,
சந்தைக்கு வந்து நின்னேன்,
பட்டெனத்துல கெடைக்கு மேண்ட்டு,
காசுசேத்துட்டு வந்தேன்!

மனசு நெறய ஆசையா,
பேரம்பேசி ஆளுக் கொன்னா,
பேத்தி பேரன் புள்ளங்களுக்கு,
பொம்மகுதிரயும் கலர் பென்சிலுமா,

எண்ணி எண்ணி பாத்த காச,
நீட்டி அவன்ட்ட குடுத்துபுட்டு,
நடைய கட்ட நெனைக்கும்போது,
கேட்டதுய்யா "டமார்...படார்"

கண்ணுக்கு ஒரே பொகமட்டும்,
காதுக்கு ஒரே கத்தல்மட்டும்னு,
எங்கெருக்கேன் ஒன்னும் தெரியல, அசச்சா
காலு நகட்ட ஒணரல!

தலயமட்டும் அசச்சுப் பாத்தா,
பலிபீடமா பூமி தெரியிதே?!
அய்யோ இந்த மனுசனெல்லாம்,
அலறி விழுரது வெளங்குதே?!

வேரென்ன செய்ய இப்போன்னு,
ஒருபக்கம் தோணுனாலும்!
ஒன்னும் புடுங்க முடியாதுன்னு,
மனசு என்னத் திங்குதய்யா!

போப்போரேன்னு தெரிஞ்சாலும்,
பாவிமனசு அடிக்குதய்யா!
தாத்தா தாத்தான்னு ஆசையா,
கூப்புடுதாப்போல கேக்குதய்யா!

உசிருக்கு சாயம்பூச முடியாம, இந்த
ஒடம்புக்கு சாயம்பூச நெனச்சுக்கிட்டு,
வந்துட்டாங்க மூதிமக்கான்னு மனசுகேக்குதே, அய்யா
ஒங்க ஆருக்கும் இந்தவலி கேக்கு..தா......?!

வெறுமை 'கூட்டல்' பெட்டகம்

எலும்பும், மக்கும்
சதையும், அனலை
நக்கும் உடலும் கொண்டே,

வருணும், சூரி
மகனும் பாரி
மலரும் எண்ணிக் கடந்தே,

விடியும் காலம்
என்றே விரட்டிக்
கவலை ஏற்றி பிறண்டே,

நகட்டிக் கழித்த
நாட்கள் நயமாய்
நன்றே முத்தம் ஈன்றே,

வெந்த காமமும்
நனைத்த பாசமும்
உயிரை உருக்கிச் சென்றே,

இருளில் துழாவி
மாயா உருவாகி
வந்து வந்து மறைந்தே,

பாங்காய் படிந்த
தாங்கு பூமியில்
சரித்திரம் பதிக்க நினைத்தே,

கேளாய் மனமே
நித்தம் நித்தம்
உன்னை மட்டும் வருத்தியே,

முடிவாய் எடுக்க
முடிவென நீயும்
நினைக்கும் வகைதான் விந்தையே!

Friday 1 March, 2013

மா பசி!

வயிற்றுப்பசிக்கு, தீனியிட
தடையிடும் தலைமைக் குடிகள்;

அறிவுப்பசிக்கு, அலைபாய
மறுத்திடும் வீணான தம்பட்டங்கள்;

தேகப்பசிக்கு, தீனியிட
வரவேற்கும் தலைமுறை ஜந்துக்கள்;

வெறுமைப்பசிக்கு, குழப்பிட
துடித்திடும் ஆசிரமக் குடில்கள்;

எப்பசி எங்குபார்த்து எவருறைத்து தெளிவுருமென,
எவ்வழி எடைபோட்டு எவர்கண்டு வழிவருமென,

அறியா மக்கள் மாக்களாகிப் புழுங்கா
விடியலில் இருள்விளங்கி மகிழ்ந்துழன்று
நடனமாடும் மெய்யும் நிறைவோ?
தலைவா!?