Wednesday 19 January, 2011

பாரம்

உருவான அகத்தைவிட்டு - இந்த
மண்ணுலகுக்குள் நுழைந்த உன்னை,
என் கையில் வாங்கிய பொழுதுகளில் -
நீ,
பாரமில்லை...

வளர்ந்து நின்ற நாள்தொடங்கி
நடந்து விளையாடி
என் தோளில் சாய்ந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

ஓடிக் குதூகலித்து, ஓய்ந்து சாய்ந்து,
உறங்கி ஆடிக்கழித்த சிறுவனாய்,
உன் ஒழுகும் மூக்கும், சைக்கிள் சிராய்ப்புகளும்,
என் மனதோடு பகிர்ந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

பள்ளியில் செய்த குறும்புகளோடு
படிக்கப்பிடிக்கா எரிச்சல்களையும்,
வீட்டில் சேர்த்து வைத்து,
வீண் பிடிவாதம் பண்ணிய பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

உன் வாலிபத்தை,
கணக்கில்லா மகிழ்ச்சியோடும், சிலபலரின்
எண்ணில்லா இகழ்ச்சி மொழிகளோடும்
பார்த்துக் கடந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

உன் கல்லூரிக் கல்விக்குத் முயன்று,
பின் பணத்தைத் தேடித் தவித்து-
அதிலும் வென்று, அந்த ஐந்து ஆண்டுகளும்
வெட்டிய இடக்கை நகங்களாய் கழிந்த பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

திருமண வயதாய் நீ கருதிய நேரத்தில்
விரும்பிய பெண்ணை வீட்டுப்பெண்ணாய்
பெற்றோருக்கே உரிய சிறு கர்வத்தில்
சின்னதொரு மறுப்பின் பின், 'சரி' சொன்ன பொழுதுகளில்
நீ
பாரமில்லை...

ஆனால்,
காலை நாலுமணிக்கு, கால் கடுக்க,
பேத்திக்கும் உமக்குமாய் வேண்டுமென,
பால் வாங்க வரிசையில்
நின்று,
களைத்தும்...

தவறாமல் நடந்து,
பதம் பார்த்து,
வயிற்றுக்குத் தேவையாய்,
காய்கறிகளை வாங்கி வந்தும்,

வெயிலில் அலைந்து,
மின்சார தொலைபேசி கட்டணத்தைக் கட்டி,
வறண்டும், துவண்டும்
ஒருவழியாக வந்து சேர்ந்தால்,

வயோதிகத்தில் தவித்து,
இயலாமையால் இம்சிக்கும் என் உடலோடு நான்.

மகனே, என் உணர்வுகளோடு விளையாடும்
உன் நா மட்டும் உன்னோடு!
புண்களும் ரணங்களும் என்னோடு!

வாழ்த்துக்கள்!... வயிற்றெரிச்சலோடு அல்ல!
பெற்ற பாசத்தோடு, வளர்த்த நேசத்தோடு!!

வரிகளின் மூலம்:
மகனின் எரிச்சல்களையும் கோபங்களையும் அனுபவிக்கும் பல முதியோர்களில், ஒருவர்!